நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி தலைமையிலான தமிழன்டா இயக்கம், கடந்த 2019ஆம் ஆண்டு ‘தமிழி’ என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டது. சுமார் 20,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, பண்டைய தமிழ் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அந்த ஆவணப்படத் தொடர் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, தமிழன்டா இயக்கத்தின் மற்றொரு முக்கிய முயற்சியாக ‘பொருநை’ என்ற ஆவணப்படம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக ஆவணப்படுத்தி இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொருநை’ ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் மற்றும் இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இணைந்து இதை இயக்கியுள்ளனர். சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், திலகேஷ் மற்றும் பரத்பாலாஜி ஆகியோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆவணப்படத்திற்கு இசையமைத்ததுடன், தயாரிப்பாளராகவும், குரல் வழிநடத்துநராகவும் ஹிப்ஹாப் ஆதி செயல்பட்டுள்ளார்.
சுமார் ஒரு வருட காலமாக நடைபெற்ற படப்பிடிப்புக்குப் பிறகு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவியல் ஆய்வுகளின் முழுமையான முடிவுகள் வெளியாகும் வரை படக்குழு காத்திருந்தது. பின்னர் அனைத்து தகவல்களையும் தொகுத்து, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பின் பலனாக இந்த ஆவணப்படம் சுவாரஸ்யமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், தற்போது துருக்கியில் நடைபெறவுள்ள Foca International Archaeology & Cultural Heritage Film Festival திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் ‘பொருநை’ திரையிடப்பட உள்ளது. தொல்லியல் மற்றும் பண்பாட்டு மரபுகளை மையமாகக் கொண்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள முதல் தமிழ் ஆவணப்படம் ‘பொருநை’ என்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
—
