நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட துயரமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்குவதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பப்பட்டபோது எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மதுரவாயலைச் சேர்ந்த 26 வயதான மதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தினகரன் (24), சூர்யா (23), சக்திவேல் (27) ஆகிய மூவருக்கும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—
