‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படங்களைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், சுவாசிகா, சிவதா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடந்த மே 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, 300 கோடி ரூபாயைத் தாண்டிய வசூலை ஈட்டி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் ஆர்.ஜே. பாலாஜிக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். தற்போது அவர் தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்துள்ளார்.
அதனுடன் அவர் வெளியிட்ட பதிவில், “கருப்பு திரைப்படத்தின் பயணம் இவரிடமிருந்துதான் தொடங்கியது. விஜய் சாரை முதல்வராக சந்தித்தது என்னால் நம்ப முடியாத ஒரு சிறப்பான தருணமாக இருந்தது. அதே அன்பு, அதே பணிவு, அதே அமைதி. ஒரு அன்பான முதல்வரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களை பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
