கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டோரதி’. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின், வசந்த பாலன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும், படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மிஷ்கின், ‘டோரதி’ படத்தைப் பற்றியும் கார்த்திக் சுப்புராஜின் படைப்பாற்றல் குறித்தும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். “கடந்த 30 ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் படங்களில் ‘டோரதி’தான் சிறந்த திரைப்படம். கார்த்திக் சுப்புராஜை என்னுடைய வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய படைப்பாளியான இளையராஜாவுக்கு இணையாக பார்க்கிறேன்” என அவர் பாராட்டினார்.
மேலும், இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்காக மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் நடித்துள்ளதாக மிஷ்கின் தெரிவித்தார். “இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருந்த ஆணைக் கொன்றுவிட்டுத்தான் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்க முடியும். நிஜ நாயகர்களாக மாறியிருக்கிறார்கள்” எனக் கூறிய அவர், இருவருக்கும் எதிர்காலத்தில் பெரிய பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.பின்னர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தனது விரல்களில் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களையும் கழற்றி ரிஷிகாந்த் மற்றும் சனந்துக்கு மிஷ்கின் பரிசாக வழங்கினார்.
