தமிழ் சினிமாவின் முக்கியமான பெண் இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான அவர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். குறிப்பாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தை தயாரித்த கண்ணன் ரவி இந்த படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ‘டெக்ஸ்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த நிலையில், ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
