சாதனை பல புரிந்தாலும் பெண்களின் வயதை வைத்து எளிதாக விமர்சனம் செய்கிறார்கள்… நடிகை மாதுரி தீட்சித் வருத்தம்!

பாலிவுட் திரையுலகில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வரும் மாதுரி தீட்சித், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் எதிர்கொள்ளும் சமூக விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பெண்களின் சாதனைகளை விட அவர்களின் தோற்றம், வயது மற்றும் உடல் அமைப்பை மையமாக வைத்து இன்னும் பலர் மதிப்பிடுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய மாதுரி தீட்சித், “ஒரு பெண் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்திருந்தாலும், பல சமயங்களில் அவளது திறமைகள் மற்றும் பங்களிப்புகளை விட அவளது வயது, உடல் எடை அல்லது தோற்றத்தை வைத்தே மதிப்பிடப்படுகிறாள். இந்த மனப்போக்கு மாற வேண்டும். மனிதர்களை அவர்கள் வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் தனித்துவம், திறமை மற்றும் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தற்போதைய டிஜிட்டல் உலகம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பும், அர்ப்பணிப்பும் இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் ஒரு விஷயத்தை சில விநாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு அதை விரும்புகிறோமா அல்லது விரும்பவில்லையா என்பதை உடனடியாக முடிவு செய்து விடுகிறார்கள். அதுதான் தற்போதைய உலகின் இயல்பாக மாறிவிட்டது” என்று கூறினார்.

சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை எதிர்கொண்டு வரும் சூழலில், பெண்களின் வயது மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் பழக்கத்திற்கு எதிராக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகின்றன. அவரது கருத்துகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து, பெண்களின் திறமையை முன்னிறுத்தி மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading