தென் கொரியாவின் சுற்றுலா துறைக்கான கவுரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

தென்னிந்திய திரைப்பட உலகில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் மலையாள நடிகைகளில் ஒருவராக பிரியங்கா மோகன் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது. தென் கொரியாவை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் இந்தியா வந்திருந்தபோது, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கிய சிறப்பு விருந்தில் நடிகை பிரியங்கா மோகனும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வு அப்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், தென் கொரியாவின் சுற்றுலா துறைக்கான கவுரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த அற்புதமான கவுரவத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரிய சுற்றுலாவின் கவுரவத் தூதராக தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத தருணமாகும். கொரிய கலாசாரத்தை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவும் ஒருவராக என்னை அங்கீகரித்த கொரிய அரசாங்கத்திற்கும், கொரிய சுற்றுலா அமைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கொரியாவின் கலாசாரம், அதன் பாரம்பரியங்கள் மற்றும் அங்குள்ள மக்களின் அன்பான உபசரிப்பு எப்போதும் எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, கருணையுடனும் அன்புடனும் வரவேற்ற கொரிய சுற்றுலா அமைப்பின் தலைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இனி வரவிருக்கும் புதிய அனுபவங்கள் மற்றும் பொறுப்புகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading