கன்னடத் திரையுலகில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கேஜிஎப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு, அவர் தற்போது ‘டாக்ஸிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகையும் இயக்குநருமான கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள கியாரா அத்வானி, படப்பிடிப்பு தளத்தில் தனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவத்தை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் எப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் அங்கு பணியாற்றும் அனைவரிடமும் ‘ஹாய்’, ‘ஹலோ’, ‘குட் மார்னிங்’ என்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் ஒரு நாள் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் என்னை அழைத்து, இதுபோன்ற வாழ்த்துகளை கூறுவதில் நேரத்தை செலவிட வேண்டாம் என்றும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த உடனேயே நீங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் மனநிலைக்குள் சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினார். அந்த நேரத்தில் அவரது அறிவுரையின் காரணம் முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் பின்னர் அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சி ஆழமும் தீவிரமும் சிதையாமல் இருக்கவே அவர் அவ்வாறு கூறியிருந்தார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
—
