‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கே.பி.ஒய். பாலா, தற்போது தனது இரண்டாவது திரைப்படமான ‘ரீமேட்ச்’ படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘ரீமேட்ச்’ திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த திரைப்படக் குழுவினருடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழில் முதன்முறையாக பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனாக நான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இந்தக் கதையை கூறியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த திரைப்படத்தில் நடிப்பது எனக்கு ஒரு சிறப்பான அனுபவமாக அமைகிறது.
இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, நான் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் என்பது படக்குழுவினருக்கு தெரியாது. அதேசமயம், நான் நீண்ட காலமாக பேட்மிண்டன் விளையாடாத காரணத்தால், இந்த திரைப்படத்திற்காக சுமார் எட்டு மாதங்களாக மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும், நடிகர் செல் முருகனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
