மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாளிகைப்புரம்’. சபரிமலை ஐயப்பனின் மகிமையை மையமாகக் கொண்டு உருவான அந்த திரைப்படம், குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பக்தி உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்திய படமாகவும் பாராட்டப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் விஷ்ணு சசிசங்கர் தற்போது தனது அடுத்த ஆன்மிக திரைப்படமாக “தத் த்வம் அஸி” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தந்த்ரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த மூன்று மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இப்படத்தின் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மிக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில், அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு நடிகர் பிரேம் ஜி அமரன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு ஐயப்ப மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாளிகைப்புரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விஷ்ணு சசிசங்கர் இயக்கும் இந்த புதிய ஆன்மிக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
