ஆரம்பத்திலேயே முதல்வர் விஜய்யை விமர்சிப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல – மத்திய அமைச்சர் & நடிகர் சுரேஷ் கோபி!

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நடிகர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வந்த விஜய், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சராக உயர்ந்திருப்பது அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியும் விஜயை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சுரேஷ் கோபி, “முதல் அமைச்சர் விஜய் தற்போது தனது பொறுப்புகளை சிறப்பாக மேற்கொள்ளட்டும். அவர் தனது செயல்பாடுகள் மூலம் தன்னை நிரூபிக்க தேவையான அவகாசத்தை வழங்க வேண்டும். ஆரம்பத்திலேயே விமர்சிப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல. மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை மதித்து நல்லாட்சியை வழங்குவது அவரது பொறுப்பு. அதற்கான நேரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “இடைத்தேர்தல்கள் என்பது பதவி விலகல் அல்லது மரணம் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவது மக்களின் நேரத்தையும் பல மாதங்களையும் வீணாக்கும் நிலையை உருவாக்குகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் கூறினார்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய சுரேஷ் கோபி, “ரஜினி சார் மனதில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம். எந்த அரசியலாக இருந்தாலும் பரவாயில்லை. நல்ல எண்ணத்துடன் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். உலகுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கும் பயனுள்ளதாக செயல்பட வேண்டும். ரஜினி சார் தமிழ் மக்களுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply