தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கல்ட் கிளாசிக் திரைப்படமாக சிறப்பித்து கொண்டாடப்படும் படங்களில் முக்கியமான ஒன்றாக ‘மங்காத்தா’ திகழ்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியாகியது. மேலும், அஜித் குமாரின் 50-வது திரைப்படமாக உருவான இந்த படம், வெளியான காலத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் சர்ஜா, திரிஷா கிருஷ்ணன், ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா ஜெரெமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த திரைப்படம், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காகவும் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘மங்காத்தா 2’ திரைப்படம் தொடர்பான தகவல்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ஏற்கனவே தயாராகி விட்டதாகவும், சில காரணங்களால் அந்தத் திட்டம் தாமதமாகி வருவதாகவும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் கண்டிப்பாக விரைவில் உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் தற்போது அஜித் ரசிகர்களிடையே ‘மங்காத்தா 2’ குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. நடிகர் அர்ஜுன் தற்போது இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
