‘எல்லம்மா’ தெய்வ வழிபாட்டில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி வந்தாலும், சிறுவயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது பெரும்பாலான இசைப்பணிகளும் சென்னை நகரில்தான் நடைபெற்று வருகின்றன. பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள தேவிஸ்ரீபிரசாத், தற்போது புதிய முயற்சியாக நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.

‘எல்லம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் தேவிஸ்ரீபிரசாத், அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தற்போது பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் அவர் தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘எல்லம்மா’ தெய்வ வழிபாட்டில் பங்கேற்றார். அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய தேவிஸ்ரீபிரசாத், “ஆந்திர மாநிலத்தில் உள்ள வெடுருபகா என்ற கிராமம்தான் என் அப்பா பிறந்த ஊர். நான் சிறுவனாக இருந்தபோது சென்னையிலிருந்து என் அப்பா என்னை அடிக்கடி அந்த கிராமத்துக்கு அழைத்து செல்வார். அங்குதான் இயற்கையையும், உண்மையான கிராமத்து வாழ்க்கையையும் அனுபவித்தேன். அந்த ஊருடனும் அங்குள்ள மக்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எனது திரையுலகப் பயணத்திற்கு இந்த கிராமம், அங்குள்ள கிராமியக் கலைகள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் மிகப்பெரிய காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையில் பல விஷயங்களை இந்த கிராமம் எனக்கு கற்றுக் கொடுத்தது. குறிப்பாக ‘எல்லம்மா’ திரைப்படத்திற்கான உத்வேகமும், உணர்வும் இந்த ஊரிலிருந்தே உருவானது” என்று உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading