அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து இயக்குநர் ஜெகதீஷ் பேசியபோது, “தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு அம்மாவுக்கும் அவரது இரட்டை பெண் குழந்தைகளுக்குமான பாசமும் உறவும்தான் இந்த படத்தின் மையக்கருவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு விபத்தில் குடும்பத்தின் தந்தை உயிரிழக்கிறார். அந்த விபத்தில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வீட்டிற்கு திரும்பும் தாயின் நடத்தையில் வித்தியாசமான மாற்றங்கள் தெரிய தொடங்குகின்றன. அந்த மாற்றங்கள் அவரது இரட்டை மகள்களின் வாழ்க்கையை பாதிக்க ஆரம்பிக்கிறது. இதனால் சந்தேகமடைந்த குழந்தைகள், தங்களது தாயைச் சுற்றியுள்ள மர்மங்களை ஆராய தொடங்குகிறார்கள். அதன் பிறகு நடைபெறும் திகில் சம்பவங்களே இந்த படத்தின் கதைக்களம்” என்றார்.
இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை அபிநயா நடித்துள்ளார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா மற்றும் சங்கீதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நிறைவு செய்யப்பட்டதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
