சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் பாடகர் கங்கை அமரன், தனது அண்ணன் இளையராஜா மற்றும் தற்போதைய இசைத்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.டென்மார்க்கை சேர்ந்த கிளாடி ஜெராடு தயாரிப்பில், பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்சனத்தின் மகன் சதா சுதர்சனம் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தில், கங்கை அமரனும் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிகர்களை உருவாக்கி, ஒரு கதையமைப்புடன் இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய கங்கை அமரன், “இசைஞானி இளையராஜாவின் இசையில்தான் நாங்கள் வளர்ந்தோம். அதேபோல் பல குருக்களின் வழிகாட்டுதலுடனும் வளர்ந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த அனுபவம் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு பாடலை முழுவதுமாக தொடர்ச்சியாக பாடுவோம். ஆனால் இப்போது ஒவ்வொரு வரியாக தனித்தனியாக பதிவு செய்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், “இசைத்துறையிலும் தற்போது ஏஐ வந்துவிட்டது. உண்மையைச் சொன்னால், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனை திறனை பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதை முழுமையாக நம்பி வேலை செய்தால், எதிர்காலத்தில் மூளை வேலை செய்யாமல் போகும் அபாயம் உள்ளது. ஒரு பாடலை ஏஐ தானாகவே எழுதிவிட்டால், அதில் நம்முடைய பெயரை எப்படி சேர்ப்பது? வருங்கால குழந்தைகள் தாங்களாகவே சிந்திக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று கூறினார்.
மேலும், தனது அண்ணன் இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் பற்றியும் கங்கை அமரன் கருத்து தெரிவித்தார். “அண்ணன் இளையராஜா குறித்து சில தவறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. குடும்பத்தினருடன் இல்லை என்று கூறுவது தவறு. அவருடன் மூத்த மகன் கார்த்திக் ராஜா இருக்கிறார். இளைய மகன் யுவன் சங்கர் ராஜா துபாயில் உள்ளார். அண்ணன் தற்போது சிம்பொனி, இசைக்கச்சேரி மற்றும் திரைப்படப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அப்படி செய்த ஒருவரிடம் நான் நேரடியாக பேசினேன். அவரும் பின்னர் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
