இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் தனுஷை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில், குறுகிய கால கட்டத்தில் உருவாக்கக்கூடிய ஒரு புதிய முயற்சியாக ‘வாழை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க மாரி செல்வராஜ் தயாராகி வருகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் கயடு லோகர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வாழை 2’ திரைப்படத்தை ஒரு ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து மாரி செல்வராஜ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, முதல்முறையாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
