லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆட்டி’. ‘மேதகு; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய தி. கிட்டு இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அயலி’ தொடரின் மூலம் கவனம் பெற்ற அபி நட்சத்திரா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“எங்கள் குளத்தில் பெண்களே முதன்மையானவர்கள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெண்களின் சமூக பங்கு, அவர்களின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் அவர்கள் வகிக்கும் இடத்தை வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களின் வலிமை மற்றும் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தை பேசும் வகையில் படம் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக கதையின் பின்னணி மற்றும் அதில் இடம்பெறும் உணர்ச்சிகரமான தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. டிரெய்லர் வெளியான பிறகு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
