‘பெத்தி’ திரைப்படத்திற்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும்… நடிகர் சிவராஜ் குமார் நம்பிக்கை!

ராம் சரண் நடிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவராஜ்குமார், “ராம் சரணை அவரது ஆரம்ப காலத்திலிருந்தே பார்த்து வருகிறேன். அந்த காலத்திலிருந்தே அவர் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றி வருகிறார். அதனால்தான் இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். இதற்கெல்லாம் அவரது தாய், தந்தையரின் ஆசீர்வாதமும் ஒரு முக்கிய காரணம். அவரது தந்தை சிரஞ்சீவி அவர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்னுடைய தம்பி புனீத் ராஜ்குமார் போலவே ராம் சரணையும் நான் பார்க்கிறேன். அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இந்த ‘பெத்தி’ திரைப்படத்திற்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இங்கிருக்கும் அனைவருக்கும் ராம் சரண் பற்றி தெரியும். அதேபோல் சிரஞ்சீவி மீதும் பலருக்கும் பேரன்பு இருக்கிறது. ஒருமுறை சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் நானும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்திருக்கிறேன். எனக்கு சிரஞ்சீவியையும், அவரது குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும். ‘பெத்தி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த உடனேயே நான் ராம் சரணுக்கு போன் செய்து, ‘நான் இந்த படத்தில் நடிக்கிறேன், அதுவே முடிவு’ என்று கூறிவிட்டேன்.

இது வெறும் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் மட்டும் அல்ல. இதில் ஆழமான உணர்வுகளும் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு உணர்வு இருக்கும். மனிதனுக்கும் விளையாட்டுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. நாம் யாருக்காக விளையாடுகிறோம், எதற்காக போராடுகிறோம் என்பதையே இந்த படம் பேசுகிறது. அந்த உணர்வு நிச்சயமாக அனைவரையும் கவரும்” என்று கூறினார். இந்த திரைப்படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading