நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை பதிவு செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் ‘டான் 3’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் இறுதிக்கட்ட நேரத்தில் அவர் அந்த படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ‘டான் 3’ படத்துக்கு பதிலாக ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகும் ‘ப்ராளே’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘டான் 3’ திரைப்படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய நடிகர் ரன்வீர் சிங்கின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரின் படங்களில் இனிமேல் பணியாற்ற மாட்டோம் என்று மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் குறித்து ரன்வீர் சிங்குடன் நேரடியாக பேசுவதற்காக 10 நாட்களுக்கு ஒருமுறை மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்குப் பிறகும் மேலும் மூன்று நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரன்வீர் சிங் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ரன்வீர் சிங் தரப்பில் அலட்சியமான அணுகுமுறை காணப்பட்டதால், கூட்டமைப்பின் இறுதி முடிவை அறிவிப்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் கூட்டமைப்பின் அதிகார வரம்பிற்குள் வராது என ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மின்னஞ்சல் மூலம் பதில் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, இனிமேல் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற மாட்டோம் என்ற ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
