30 ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மீனாட்சி சேஷாத்ரி!

90களில் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை மீனாட்சி சேஷாத்ரி, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1983-ம் ஆண்டு வெளியான ‘பெயிண்டர் பாபு’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், அதன் பின்னர் ‘ஹீரோ’, ‘தாமினி’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்தி சினிமாவுடன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள மீனாட்சி சேஷாத்ரி, தனது அழகு, நடிப்பு திறன் மற்றும் சிறந்த நடனத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். தமிழில் நடிகர் பாக்யராஜுடன் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ மற்றும் நடிகர் பிரபுவுடன் ‘டூயட்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவரது நடனமும், இயல்பான நடிப்பும் அந்த காலகட்ட ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.தனது சொந்த தயாரிப்பில் உருவான ‘கதக்’ திரைப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு “செரிஷ் டான்ஸ் ஸ்கூல்” என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு “மீனாக்ஷி அக்சப்ட் ஹர் விங்ஸ்” என்ற ஆவணப்படமும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக மீனாட்சி சேஷாத்ரி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிய கதாபாத்திரமா, சிறிய கதாபாத்திரமா என்பது முக்கியமல்ல; ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படங்களில் மட்டுமின்றி ஓடிடி தொடர்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தனக்கென ஏஜென்ட் அல்லது பி.ஆர். நிறுவனம் எதுவும் இல்லாமல் தானாகவே வாய்ப்புகளைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மீனாட்சி சேஷாத்ரியின் இந்த கம்பேக் அறிவிப்பு பழைய சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading