தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ரகுமான். தனது ஆரம்பகாலங்களில் பல கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்த அவர், அதன் பிறகு நகர்ப்புற கதைகள் மற்றும் கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு முழுமையான கிராமிய பின்னணியிலான கதையில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாரதி பாலகுமாரன் இயக்கி வருகிறார்.
இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் பாரதி பாலகுமாரன், “தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் இது. மண் சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் கிராமிய மக்களின் வாழ்வியலை பல திரைப்படங்கள் இதற்கு முன்பும் பதிவு செய்துள்ளன. ஆனால், இந்த படம் அதைவிட வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
1980களின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில், அமானுஷ்ய சம்பவங்களால் பாதிக்கப்படும் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜமீன் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்துள்ளார். உணர்ச்சியும் மர்மமும் கலந்த இந்தக் கதைக்களம் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் சார்பில் கோமளா மற்றும் ஹரி பாஸ்கரன் தயாரித்து வருகின்றனர். மேலும், இந்த திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்வா நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
