இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம் முழுமையான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. ‘அரசன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ‘அரசன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த வகையான கதைக்களத்தில், எந்த இயக்குநருடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அவரது அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘டியூட்’ திரைப்படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. தற்போது இந்த திரைப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஐதராபாத்தில் சுமார் 20 நாட்கள் தொடர்ந்து கதை விவாதங்கள் நடைபெற்றதாகவும், தற்போது சென்னை மகாபலிபுரத்தில் அடுத்த கட்ட விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
