தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் வரை வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின் மிகவும் கவனம் பெறும் இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அட்லீ, பின்னர் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரது முதல் படமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிய அட்லீ, 2023-ம் ஆண்டு பாலிவுட்டிலும் தனது முதல் படத்திலேயே மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் அட்லீ இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
தற்போது அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படமும் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து நடத்தி வரும் ‘A for Apple’ தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
