நல்ல கதாபாத்திரங்களுக்காக இரண்டு வருடங்கள் வரை நான் காத்திருக்க தயார் – நடிகை ஜோதிகா!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஜோதிகாவிடம் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில், “நீங்கள் மீண்டும் எப்போது தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிகா, நான் தற்போது சரியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் வருவதற்காக காத்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் பல அழுத்தமான மற்றும் பெண்ணை மையமாக வைத்து உருவாகும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வழக்குரைஞர் வரை பலவிதமான பெண்களின் வாழ்க்கைப் பாத்திரங்களை நான் திரையில் செய்து விட்டேன். குடும்பத் தலைவி கதாபாத்திரங்களிலும் பல பரிமாணங்களில் நடித்துவிட்டேன். இப்போது அதைவிட புதுமையான, வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அதற்காக இரண்டு வருடங்கள் கூட காத்திருக்க வேண்டியிருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் சமீபத்தில் மம்முட்டி சாருடன் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. அது அமைதியானதாய் இருந்தாலும் மிகவும் வலுவான ஒரு பெண்ணின் குணநலன்களை கொண்ட பாத்திரமாக இருந்தது. இப்படிப்பட்ட வேடங்களைத்தான் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இல்லையெனில் அது எனக்கும், பார்வையாளர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்திவிடும். ரசிகர்கள் என்னை கடந்த 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்கள். நான் ஒரே மாதிரியான விஷயங்களை தொடர்ந்து செய்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

நான் இதுவரை பெரும்பாலும் நல்ல மனசுடைய, நல்லவற்றை மட்டுமே செய்யும் பெண்களாக நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதைவிட மாறுபட்ட கதாபாத்திரங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தற்போது பார்வையாளர்களும் மிகவும் மேம்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழி திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதுபோல நானும் என்னுடைய நடிப்பில் அடுத்த கட்டத்தை நோக்கிப் பார்க்கிறேன்.

இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் சூர்யா எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். நான் விரும்பும் மாதிரியான கதைகள் இன்னும் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக எழுதப்படுவதில்லை. பெண்களின் பல்வேறு பரிணாமங்களையும் உண்மையான வாழ்க்கை அனுபவங்களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் பெண்கள் பல பரிமாணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தற்போது எனக்கு பாலிவுட்டில் அதிகமாக கிடைக்கின்றன. எனவே அது தமிழ்ப் படமா, இந்திப் படமா என்பது எனக்கு முக்கியமல்ல. அது குஜராத்தி திரைப்படமாக இருந்தாலும்கூட அந்தக் கதாபாத்திரம் எனக்கு பிடிக்க வேண்டும். ஒரே மாதிரியான விஷயங்களையும், அதே ஆறு முகபாவனைகளையும் மீண்டும் மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading