இயக்குனர் இமயம் ‘பாரதிராஜா ‘ காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் இமயம்’ என்ற பெருமையுடன் கொண்டாடப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, 84 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின் ஒரு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பிய பாரதிராஜா, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டத்தின் அல்லிநகரத்தில் 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சிறுவயதிலிருந்தே சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது கனவை நனவாக்க சென்னை வந்தார். பின்னர் இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பிறகு பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் இணைந்து திரைப்படக் கலையின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வாவா’, ‘மண்வாசனை’, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கொடி பறக்குது’, ‘என்னுயிர் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’, ‘கேப்டன் மகள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘தமிழ்ச் செல்வன்’, ‘அந்தி மந்தாரை’, ‘தாஜ்மகால்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈரநிலம்’, ‘கண்களால் கைது செய்’, ‘பொம்மலாட்டம்’, ‘அன்னக்கொடி’, ‘மீண்டும் ஒரு மரியாதை’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் அழியாத தடம் பதித்துள்ளார்.

திரைப்படங்களை ஸ்டுடியோவின் எல்லைகளுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், கிராமங்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் மண்வாசனையையும் வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவுக்கே சொந்தம். கிராமிய கதைகளையும், இயற்கை சார்ந்த காட்சியமைப்புகளையும், உணர்வுப்பூர்வமான மனித உறவுகளையும் மையமாக வைத்து பல மறக்க முடியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

இயக்குனர் பாரதிராஜா இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை 2004ஆம் ஆண்டு பெற்றார். மேலும், 6 தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார்‌ அதோடு பல பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், நந்தி விருது, விஜய் விருதுகள், கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என பலவற்றை பெற்றுள்ளார்.

பாரதிராஜாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலத்தை உருவாக்கிய படைப்பாளியின் மறைவு, திரையுலகிற்கும் தமிழ் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading