நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றிருந்தது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்திருந்த இந்தப் படத்தை, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.
இந்த வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் முதல் பாடலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், சான் ரோல்டனும் சைந்தவியும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
