ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘கருப்பு’. இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ள நிலையில், இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, ஆக்ஷன், கிராமத்து கடவுள் நம்பிக்கை மற்றும் கோர்ட் டிராமா அம்சங்களுடன் கமர்ஷியல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவாகியுள்ளது. இது நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் கூறுகையில், “பல்வேறு தடைகளை தாண்டி இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் மிகப்பெரிய பலமே அவரது நடிப்பும் ஆக்ரோஷமும்தான். ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவர்ந்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யா – திரிஷா ஜோடி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரிஷா வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.மேலும், “கிராமத்து காட்சிகளும், கருப்பசாமி தொடர்பான காட்சிகளும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும், சாய் அபயங்கரின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘காட் மோட்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன” என்றும் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ‘கருப்பு’ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு கிடைத்து வருவதாகவும், இந்த படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
