நடிகை அபிராமி சமீபத்தில் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திருவனந்தபுரத்தில் பிறந்த அபிராமி, மலையாள திரையுலகின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி பின்னர் தமிழில் ‘வானவில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், ‘விருமாண்டி’ திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய அபிராமி, ‘மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் பெற்றார். கடைசியாக அவர் ‘ஐபிஎல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
‘லவ் டுடே’, ‘கோட்’, ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ப்ளாஸ்ட்’. இதில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை, பிரதீப் ரங்கநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் வரும் மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் குறித்து பேசிய அபிராமி, “இந்த திரைப்படத்தில்தான் நான் முதல்முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அதன் உண்மையான கஷ்டம் என்ன என்பது எனக்கு புரிந்தது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் சண்டைக் காட்சிகளில் நடித்த பிறகு, இயக்குநரிடம் ‘நீங்கள் பக்கம் பக்கமாக வசனங்கள் கொடுத்தாலும் பேசிவிடுகிறேன். உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளிலும் நடித்துவிடுகிறேன். ஆனால் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் கடினமாக இருக்கிறது’ என்று சொன்னேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆக்ஷன் காட்சிகளுக்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். நிறைய ஒத்திகை செய்ய வேண்டி இருக்கும். ஒருவரை அடிப்பது எளிது. ஆனால், அவருக்கு அடிபடாமல் அடிப்பது மிகவும் கடினமான விஷயம். இந்தப் படத்தில் நான் நடித்த சண்டைக் காட்சிகளுக்கான முழு பாராட்டும் சண்டைப் பயிற்சியாளர் பிரபு மற்றும் அவரது குழுவினருக்கே சேர வேண்டும். அவர்களால்தான் அந்த காட்சிகள் இவ்வளவு சிறப்பாக உருவாகின. இந்த அனுபவம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
