முதல்வர் விஜய் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் – நடிகர் சஞ்சீவ் டாக்!

தமிழக முதல்வர் விஜயின் நீண்டநாள் நண்பரும், ‘மெட்டிஒலி’, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பிரபல சின்னத்திரை தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகருமான சஞ்சீவ், சென்னையில் அளித்த பேட்டியில் முதல்வர் விஜயுடன் உள்ள தனது நட்பு மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “எனக்கும் முதல்வர் விஜய்க்கும் கடந்த 35 ஆண்டுகளாக நட்பு உள்ளது. கல்லூரி காலங்களில் பல கனவுகள், ஆசைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அப்போது அவர் முதல்வராக வேண்டும் என்ற கனவை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. சினிமாவில் பல தடைகளை தாண்டி அவர் வெற்றி பெற்றார். மிகப்பெரிய இடத்தை அடைந்தார். தற்போது தமிழகத்தின் முதல்வராக உயர்ந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சினிமாவை விட அரசியலில் அதிகமான எதிர்ப்புகளும் தடைகளும் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் விஜய் முறியடிப்பார். மக்கள் எதிர்பார்ப்பதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். யாரையும் ஏமாற்ற மாட்டார். என்னைப் பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூரைப் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும். சிங்கப்பூரில் மருத்துவம், பாதுகாப்பு மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழகமும் சிறந்த நிலைக்கு செல்லும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரிடம், “முதல்வரான பிறகு விஜயின் உடை அலங்காரத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?” என்று கேட்கப்பட்டபோது, “இந்தியாவில் எந்த முதல்வரும் கோட் அணிவது அரிது. ஆனால் விஜய் எப்போதும் ட்ரெண்ட் செட்டராக இருந்தவர். அதனால் அவர் உடையிலும் புதிய ஸ்டைலை பின்பற்றுகிறார்” என்று கூறினார். மேலும், “எதிர்காலத்தில் த.வெ.க சார்பில் தேர்தலில் போட்டியிடுவீர்களா அல்லது ராஜ்யசபா உறுப்பினராக வருவீர்களா?” என்ற கேள்விக்கு, “அது அனைத்தும் கால சூழ்நிலையைப் பொறுத்தது. தற்போது அதைப் பற்றி யோசிக்கவில்லை. காலமே அனைத்தையும் தீர்மானிக்கும்” என்று பதிலளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading