‘ஒரு நாள் கூத்து’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்தார். குறிப்பாக 2023ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர், சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்து கார் ரேஸிங் உள்ளிட்ட விளையாட்டு துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அந்த திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடிகை நிவேதா பெத்துராஜ் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம், முதல் முறையாக நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இசையமைப்பாளராக தமன் பணியாற்றி வருகிறார். தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிகை நிவேதா பெத்துராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு த்ரிவிக்ரம் இயக்கிய ‘அல வைகுந்தபுரம்’ திரைப்படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
