சினிமா உலகில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்துபோன பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து பயன்படுத்துவது முதல், மறைந்த நடிகர்களை திரையில் மீண்டும் கொண்டு வருவது வரை பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மலையாள திரையுலகில் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு முழுநீள திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
‘வாக்தத்த பூமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், மலையாள சினிமாவின் முதல் ஏஐ திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. சுயாதீன திரைப்பட இயக்குநரான சித்திக் பறவூர் இப்படத்திற்கான கதை, திரைக்கதை, அனிமேஷன் மற்றும் இயக்கப் பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தின் எந்தக் காட்சிக்கும் கேமரா பயன்படுத்தப்படவில்லை என்றும், முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மட்டுமே படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்காக கூகுளின் Veo 3, Higgsfield, OpenArt, ChatGPT, Gemini, ElevenLabs மற்றும் Seedance 2 உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றமான ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தும் நோக்கில், நிஜ மனிதர்களின் முக அமைப்புகளும் ஏஐ குறிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 72 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
