நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘அப்பா குட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம் மற்றும் மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து வருகிறார். தந்தை மற்றும் மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனுடன், படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.
—
