நடிகை துஷாரா விஜயன் முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் ‘கட்டாளன்’. கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்திற்கு பிறகு, கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதனால் பான் இந்தியா ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், காட்டுப் பகுதிகளில் நடைபெறும் பரபரப்பான கடத்தல் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ரேனா திவே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன், திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
