சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாருகேசி’ திரைப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
ஒய்.ஜி. மகேந்திரன் மேடையில் நிகழ்த்திய பிரபலமான நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாருகேசி’, இசையை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது. செவ்வியல் இசை, மனித உறவுகள், குடும்ப பாசம், உணர்ச்சிகள் மற்றும் கலை மரபின் பெருமை ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களை கவரும் வகையில் சினிமா மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘சங்கராபரணம்’, ‘சிந்து பைரவி’ போன்ற இசை பின்னணியிலான படங்களின் வரிசையில் இந்த திரைப்படமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அப்போது படக்குழுவினரின் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், இசையும் கலாச்சார பாரம்பரியமும் நிறைந்த கதையை திரைத்துறைக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ‘சாருகேசி’ திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
