பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசிய தலைமைப் பண்பு தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பின. அந்தப் பேச்சு தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக தவெக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வந்தது.
ஒரு வாரமாக நீடித்து வந்த இந்த சர்ச்சைக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். வெளியாகியுள்ள புதிய புரோமோவில், வீட்டுக்குள் தாங்கள் பேசும் கருத்துகள் அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கும் நிகழ்ச்சியினருக்கும் இடையிலானவை மட்டுமே என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே இருக்கும் எந்த ஒரு நபரையோ, அமைப்பையோ மனதில் வைத்துக்கொண்டு தங்களது கருத்துகள் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த விளக்கத்தை கடந்த வாரமே கூறியிருக்க வேண்டும் என நினைத்ததாகவும், ஆனால் தற்போது அதற்கான சூழல் உருவாகியதால் இதை தெரிவிப்பதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
