அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹில்டன் மிட் டவுன் ஓட்டலில் நவம்பர் 23-ம் தேதி சர்வதேச எம்மி விருது விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 24) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, கருப்பு நிற கோட்-சூட் அணிந்து மேடையில் விருது வழங்கினார். சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கிய முதல் தமிழ் நடிகர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளாவிய திரைப்பட மேடையில் தமிழ் சினிமாவின் அடையாளத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவை இந்திய நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் தொகுத்து வழங்கியிருந்தார். அதேபோல், 2016-ம் ஆண்டு நடைபெற்ற பிரைம்டைம் எம்மி விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா விஜய் சேதுபதியுடன் பங்கேற்றார். இருவரும் ஒரே மாதிரியான கருப்பு நிற கோட்-சூட் அணிந்து வந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. சர்வதேச அளவில் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினரும் தயாரிப்பாளருமான கவிதா குப்தா வழியாக விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மேடையில் விருது வழங்கி தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்த்த அவருக்குப் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
