Advertisement

‘ராஜா ராணி’க்குப் பிறகு மீண்டும் மென்மையான காதல் கதையில் நடித்துள்ளேன் – நடிகர் ஆர்யா!

டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘ஹலோ காதல்’ படத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். ‘பிரணய விலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆர்யா, இப்படத்தைத் தேர்வு செய்ததற்கான காரணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் நடித்துவந்த தனக்கு ஒரு ஜாலியான காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாக ஆர்யா தெரிவித்தார். தனது திரைப்பயணத்தில் மறைந்த இயக்குநர் ஜீவாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த ஆர்யா, “ஜீவா சார் இன்று இருந்திருந்தால், ‘உள்ளம் கேட்குமே’ போன்ற மேலும் பத்து படங்களில் நடித்திருப்பேன். நடிகர் ஷாமும் இதையே அடிக்கடி சொல்வார். அவர் இருந்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு மேலும் பத்து புதிய கதாநாயகர்களை அறிமுகப்படுத்தியிருப்பார். அதுமட்டுமின்றி பல அழகான படங்களையும் கொடுத்திருப்பார் என்றார்.

கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, இயக்குநர் நிகில் முரளியிடம் ஒரு கதை இருப்பதாகவும் அதைக் கேட்கும்படியும் சிலர் ஆர்யாவிடம் கூறியுள்ளனர். பின்னர் கதை கேட்டு அதன் மையக்கரு அவருக்குப் பிடித்துப்போகவே படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் நிகில் இயக்கிய ‘பிரணய விலாசம்’ படத்தைப் பார்த்த ஆர்யா, அதன் அழகான கதை சொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு ‘ஹலோ காதல்’ படத்தில் நடிக்க முடிவு செய்து நடித்ததாக கூறியுள்ளார். குறிப்பாக ‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் மீண்டும் ஒரு மென்மையான கதைக்களத்தில் நடித்திருப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply