முதல்வர் விஜய்யை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சிபி சத்யராஜ்!

தமிழகத்தின் முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை, அவரது அன்றாட அரசியல் மற்றும் நிர்வாக பணிகளுக்கு இடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார். அப்போது அவர்கள் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்ததுடன், குடும்பத்துடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் சிபி சத்யராஜ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், “தமிழக சட்டமன்ற தேர்தலில் நமது மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக அவரை அறிந்திருக்கும் ஒருவராக, அவரது பணிவு, அன்பு மற்றும் எளிமை இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி தொடர்வதை பெருமையுடன் சொல்ல முடிகிறது. அவருக்கு நல்ல உடல்நலம், தொடர்ச்சியான வெற்றி மற்றும் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் விஜய்க்கு ‘மெடிடேஷன்ஸ்’ (Meditations) என்ற புத்தகத்தையும் சிபி சத்யராஜ் பரிசாக வழங்கியுள்ளார். ரோமானிய பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய இந்த புத்தகம், ‘ஸ்டாயிசிசம்’ (Stoicism) எனப்படும் கிரேக்க தத்துவ சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அமைதியாக எதிர்கொள்வது, இயற்கை மற்றும் மரணம் குறித்த புரிதல், மன கட்டுப்பாடு போன்ற பல ஆழமான சிந்தனைகளை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading