சிரஞ்சீவியின் 158வது படத்தின் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்த பவன் கல்யாண்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி சீனியர் நடிகரான சிரஞ்சீவியின் 158வது திரைப்படத்தின் பூஜை விழா இன்று ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. ‘வால்டர் வீரய்யா’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாபி கொல்லியுடன் சிரஞ்சீவி மீண்டும் இணையும் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கன்னடத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற முகூர்த்த விழாவில் சிரஞ்சீவியின் தம்பியும், ஆந்திரப் பிரதேச மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. தனது தம்பி கலந்து கொண்டு வாழ்த்தியதை தொடர்ந்து சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிரஞ்சீவி கூறுகையில், “இன்று கல்யாண் பாபுவிற்கும் எனக்கும் இடையில் அந்த கிளாப்போர்டு வைக்கப்பட்டிருந்த காட்சியை பார்த்தபோது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நினைவு என் மனதில் மீண்டும் வந்தது. அப்போது ‘தொலி பிரேமா’ திரைப்படத்தின் உருவாக்க பணிகளின்போது இதேபோன்ற தருணம் தலைகீழாக நடைபெற்றது. அந்த திரைப்படம் ஆரம்பத்தில் ‘அக்கட அம்மாயி இக்கட அப்பாயி’ என்ற பெயரில் உருவாகி வந்தது. இன்று துணை முதலமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர், தனது பரபரப்பான பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி என் 158வது படத்தின் முகூர்த்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் அந்த கிளாப்போர்டை அடித்ததன் மூலம், இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அளவற்ற உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் வழங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading