‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். படக்குழுவினரின் நகைச்சுவை கலந்த பேச்சுகள் மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்கள் நிகழ்ச்சியை உற்சாகமாக மாற்றின.
இந்த நிகழ்வில் பேசிய சாண்டி மாஸ்டர், “நாங்கள் அடிக்கடி மிஷ்கின் சார் ஆபீஸுக்கு செல்வோம். அங்கு ‘பன்னீர் சோடா’ குடித்து பல நேரங்களை சந்தோஷமாக கழித்திருக்கிறோம்” என்று கூறி பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து மேடையேறிய மிஷ்கினும் ‘பன்னீர் சோடா’ சம்பவங்களை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்தார்.
அப்போது அவர், தனது அலுவலகத்திற்கு பலரும் வந்து ‘பன்னீர் சோடா’ குடித்த சம்பவங்களையும், அந்த பன்னீர் சோடா மூலம் விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் இடையிலான ஒரு பிரச்சனை எப்படி சரியானது என்பதையும் நகைச்சுவையாக பகிர்ந்தார். மேலும், சாண்டி மாஸ்டர் தனது லுங்கியில் ‘பன்னீர் சோடா’ எடுத்துக்கொண்டு வருவார் என்றும், இரவு முழுவதும் அதை குடித்துவிட்டு தன்னை ஹார்மோனியம் வாசிக்கச் சொல்லி பாடல்கள் கேட்டு ரசிப்பார்கள் என்றும் சிரிப்புடன் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நடிகர் ஜெயராம், “என்னை மட்டும் மிஷ்கின் பன்னீர் சோடா குடிக்க அழைக்கவில்லை. ஆனாலும், அதை விட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டது” என்று நகைச்சுவையாக பேசியதால் அரங்கமே சிரிப்பில் முழங்கியது. கடைசியாக பேசிய மிஷ்கின், “பன்னீர் சோடா குடிப்பதால் மனமும் உடலும் உற்சாகமடையும்” என்று கூறி மீண்டும் அனைவரையும் சிரிக்க வைத்தார். ‘பன்னீர் சோடா’ என்ற வார்த்தையின் பின்னணி அர்த்தத்தை புரிந்துகொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சிரிப்பலையில் மிதந்தனர்.
