மலையாள சினிமாவை விட குறைந்த நாட்களில் ‘பரிமளா & கோ’ படத்தை முடித்தார் பாண்டிராஜ் – நடிகை ஊர்வசி டாக்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, அனந்திதா, சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகை ஊர்வசி, இந்த திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தில் கதையே ஹீரோவாக அமையும் தருணங்கள் மிகவும் அரிது. அவ்வப்போது மட்டுமே அப்படிப்பட்ட கதைகள் கிடைக்கும். இந்த படத்தின் முழுக் கதையையும் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் ஜெயராம் இந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் இன்னும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. நாங்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு. ‘பஞ்சதந்திரம்’ படத்திற்கு பிறகு, ‘புத்தம் புது காலை’ படத்தில் ஒரே ஒரு நாளுக்கு மட்டும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல கதைகள் வந்தாலும், எங்களிருவருக்கும் பொருத்தமான சரியான கதை அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் பாண்டிராஜ் குறித்து பேசிய அவர், “பாண்டிராஜின் மிகப்பெரிய பலம் அவரது எழுத்து திறமையே. ‘பசங்க’ திரைப்படத்திலிருந்து அவரது அனைத்து படங்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். கதைக்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். பொதுவாக மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவார்கள் என்று கூறுவார்கள். இப்போதும் பல படங்கள் 45 நாட்களுக்குள் முடிகின்றன. ஆனால், பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை அதைவிட வேகமாகவும் திட்டமிட்டும் உருவாக்கியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் அந்த சமயத்தில் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்ததால், அங்கிருந்து இங்கு வந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில சிரமங்களும் ஏற்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து இந்த படத்தில் நடித்தேன். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் சந்தோஷமாகவும் ரசிக்கும்படியும் அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading