‘சேயோன்’ படத்திற்கு எனது முழுமையான பங்களிப்பை வழங்க விரும்புகிறேன் – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்துவருகிறார். மேலும், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘சேயோன்’ திரைப்படம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “‘சேயோன்’ திரைப்படம் எனது தனிப்பட்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்தப் படத்தை நான் சாதாரண வேலையாக பார்க்கவில்லை. இதுவரை நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் திறமைகளையும் முழுமையாக பயன்படுத்தி, இந்த படத்திற்கு எனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அவர், “ஒரு காலத்தில் சிவா மிகவும் கஷ்டப்பட்டார். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வருவது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அனைத்து தடைகளையும் தாண்டி அவர் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்கள். எங்களுக்குப் பின்னணியாக பெரிய ஆதரவுகள் எதுவும் இல்லை. தனது உழைப்பின் மூலம் மட்டுமே சிவா இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை இருக்கிறது” என்று சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading