தமிழ் சினிமாவில் ‘பீட்சா’, ‘ஜிகிர்தண்டா’, ‘பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல தனித்துவமான திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரையை பதித்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இயக்குநராக மட்டுமல்லாமல், தனது ‘ஸ்டோன்பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் தனித்துவமான திரைக்கதைகளால் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ள கார்த்திக் சுப்பராஜ், தற்போது புதிய முயற்சியாக நடிகராகவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா உலகில் பல இயக்குநர்கள் பின்னர் நடிகர்களாக மாறுவது புதிய விஷயம் அல்ல. சமீபகாலங்களில் பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவிந்த் போன்ற இளம் இயக்குநர்களும் நடிகர்களாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது கார்த்திக் சுப்பராஜும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, இயக்குநர் தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் கார்த்திக் சுப்பராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ராஜ் பி ஷெட்டி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இதில் முக்கிய அதிகாரி கதாபாத்திரத்தில் கார்த்திக் சுப்பராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
