பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். “விஜய் அரசியலில் நீந்தி வருவது கடினம் என்று முன்பு கூறியிருந்தீர்கள். ஆனால் தற்போது விஜய் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகிவிட்டாரே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அப்போது அப்படிச் சொன்னது உண்மைதான். ஆனால், அந்த எல்லா சவால்களையும் கடந்து இன்று விஜய் முதல்வராக வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ஒரு தாயின் மனதுடன், அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று நான் மனமார ஆசீர்வதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “விஜயுடன் ‘வசந்த ராகம்’, ‘பூவே உனக்காக’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். முதல் படம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். அப்போது அவர்களின் குடும்பத்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் விஜய்க்கு பாட்டியாக நடித்தேன். விஜயின் அம்மா ஷோபா எனக்கு அடிக்கடி போன் செய்து, ‘என் மகனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுவார். ஆனால், விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். என்னிடம் மட்டும் கொஞ்சம் பேசுவார். இதைப் பார்த்து நடிகர் நம்பியார் கூட, ‘என்னிடமெல்லாம் பேச மாட்டார், உன்னிடம் மட்டும் எப்படி பேசுகிறார்?’ என்று நகைச்சுவையாகக் கேட்பார்” என்று நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “அவ்வளவு அமைதியான மனிதராக இருந்த விஜய் இன்று அரசியலில் தன்னம்பிக்கையுடன் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது வெற்றியை நான் அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன். அதே நேரத்தில், அவரது ஆட்சி ‘குருவி தலையில் பனங்காய்’ இருப்பதைப் போன்ற ஒரு பெரிய பொறுப்பாக உள்ளது. அந்த பனங்காய் பழுக்குமா, கீழே விழுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
