வருகிற 27ஆம் தேதி முதல் ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள புதிய வெப் தொடர் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’. இந்த தொடரில் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘உப்பு புளி காரம்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இந்த தொடரை இயக்கியுள்ளார். கள்ளக்காதல் பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ள அண்ணனை காப்பாற்ற தங்கைகள் ஒன்றிணையும் குடும்பக் கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது.
இந்த தொடர் குறித்து ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தக் கதையின் மையத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் குடும்பத் தலைவர் சண்முக சுந்தரம் இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடித்துள்ளார். அவரது மனைவி பொன்மலராக காயத்ரி சாஸ்திரி நடித்துள்ளார். அன்பும் எளிமையும் நிறைந்த குடும்பமாக வாழும் இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். வழக்கறிஞராக இருக்கும் நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்று கனவு காணும் ஷ்ரவ்னிதா என குடும்பம் அமைதியாக வாழ்ந்து வருகிறது.
இந்த சூழலில், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவருகிறது. இந்த அதிர்ச்சி உண்மையால் குடும்பத்தில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. குடும்பம் சிதறி போகாமல் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சகோதர, சகோதரிகள் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதையே இந்த தொடர் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
