சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ரவி மோகன், ‘ஜெயம்’, ‘தனி ஒருவன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். இதற்கிடையில், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் எனக் கோரி ரவி மோகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி, அவரது தாயார் சுஜாதா மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார்.

அப்போது பேசிய அவர், தனது குழந்தைகளை பார்க்க கூட ஆர்த்தி தரப்பு அனுமதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்றும், ஏற்கனவே நடித்துள்ள படங்களையும் வெளியிட விருப்பமில்லை என்றும் தெரிவித்திருந்தார். மனைவி மற்றும் மாமியார் குறித்து அவர் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் நோக்கில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 41 நாட்கள் கடுமையான விரதத்தை கடைப்பிடித்த பிறகு, வரும் ஜூலை மாத தொடக்கத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading