உலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஒடிசி’. இந்த திரைப்படம் தற்போது உலக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரபல கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய ‘ஒடிசி’ என்ற காவியக் கவிதையை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பலமடங்கு உயர்த்தியுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப தரம் காரணமாக இப்படம் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படம் முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, சுமார் 20 லட்சம் அடி நீளமுள்ள பிலிம் ரோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நேரடியாக அளந்தால், சுமார் 600 கிலோமீட்டர் நீளத்திற்கு சமமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக சினிமாவில் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளையும் வித்தியாசமான காட்சியமைப்புகளையும் கொண்டு வரும் கிறிஸ்டோஃபர் நோலன், இந்த ‘ஒடிசி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு முழுமையான ஐமேக்ஸ் காட்சியனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
