இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும், அவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடிய முன்னாள் நீதிபதி சந்துருவின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சமூக அக்கறையுடன் உருவான இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் எப்போது இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது சூர்யாவின் 48வது திரைப்படத்தை ஞானவேல் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படம் சமூக அக்கறையுடன் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றியபோதும் சிகிச்சைக்காக வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்ற “திருவேங்கடம் வீரராகவன்” என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்குச் சேவை செய்வதே தனது வாழ்க்கையின் நோக்கம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவர், ஏழை மற்றும் எளிய மக்களுக்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர் என கூறப்படுகிறது. இதற்கிடையில், தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
