இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அதன் பின்னர் பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அவர் கதாநாயகனாக நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், அவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. அதேபோல், வெற்றிபெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் குரு சோமசுந்தரம் தற்போது ‘பாரிஸ் கஃபே’ என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்ற அறிவிப்பை, படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தான்’ மற்றும் ‘பாட்டில் ராதா’ போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்த அவர், தற்போது இந்த புதிய காதல் நாடகத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் நடுத்தர வயதினரின் காதலை மையமாகக் கொண்ட காதல் நாடகமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் நடிகை அனுமோல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விஜய் விஸ்வா மற்றும் அர்ச்சனா குமார் ஆகியோரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கியுள்ளார். எல்வி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கண்மணி ரங்கநாதன் தயாரித்து வருகிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சதீஷ் ஜி, இசையமைப்பாளராக கே, படத்தொகுப்பாளராக வி.கே. சாபு ஜோசப் மற்றும் கலை இயக்குநராக தாமு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகழகாய் மனம்’ பாடலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
