உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது ‘தி ஒடிசி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கவிஞர் ஹோமர் எழுதிய கிரேக்க புராண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, இதுவரை அறிவியல், உளவியல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்களை இயக்கி வந்த கிறிஸ்டோபர் நோலன், முதல் முறையாக புராணக் கதையை மையமாகக் கொண்டு படம் இயக்குவது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. இப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ‘ஹெலன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோவை தேர்வு செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரேக்க புராணங்களில் ‘ஹெலன்’ பேரழகியாக வர்ணிக்கப்படும் நிலையில், அந்த கதாபாத்திரத்தில் கருப்பினத்தை சேர்ந்த நடிகையை ஏன் நடிக்க வைத்துள்ளனர் என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.
ஹாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல திரைப்படங்களில் ‘வோக்’ கலாசாரம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது, கதைக்கு அவசியமில்லாத சூழல்களிலும் சமூக நீதி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட கருத்துகளை கட்டாயமாக சேர்க்கப்படுவதாகவும், இதனால் திரைப்படங்களின் இயல்புத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் எலான் மஸ்கும் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்டோபர் நோலன் இப்படியான முயற்சிகளை செய்கிறார். அவர் கிரேக்க மக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள கிறிஸ்டோபர் நோலன், “‘இலியட்’ காவியம் பெரும்பாலும் செவிவழி கதையாக தலைமுறைகள் கடந்து பரவியுள்ளது. அதனை குறிக்கும் விதமாகவே திரைப்படத்தில் சில கருப்பின நடிகர்களை நடிக்க வைத்துள்ளேன். எந்தவித சர்ச்சையையும் உருவாக்குவது என் நோக்கம் அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.
